Saturday

கலில் ஜிப்ரான்

வாழ்க்கை தத்துவத்தை எளிமையாக எடுத்துணர்த்தும் கலில்ஜிப்ரானின் தத்துவ விளக்கங்கள்/ கவிதைகள் ஏராளம். அவற்றில் சில.

லெபலான் தேசத்தில் பிறந்த ஜிப்ரான் (1883), தனது 12 வயதில் குடும்ப கஷ்டம் காரணமாக நியூயார்க்கிற்கு குடியேறி வாழ்ந்து வந்தார். இவர் கவிஞர் மற்றும் சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார். அதுமட்டுமன்றி இவர் எல்லோராலும் தீர்கதரிசியாக உணரப்பட்டார். இவருடைய பெரும்பாலான ஓவியங்களில் , நிர்வாணமான பெண்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். இவர் தனது உள்மனதை அகழ்வாராய்ச்சி செய்து எழுதும் கவிதைகள் ஜென் சிந்தனைகள் வெளிப்படும்.

சில கவிதைகள்/தத்துவங்கள்.
[ ]
Only once have I been made mute. It was when a man asked me, "Who are you?"
ஒரே ஒரு முறை நான் ஊமையாக நின்றேன் " நீ யார் ? என்று ஒருவன் என்னைக் கேட்ட போது ..
[ ]
The most pitiful among men is he who turns his dreams into silver and gold.
தன் கனவுகளைப் பொன்னாகவும் வெள்ளியாகவும் மாற்றிப் பார்ப்பவன் மிகவும் பரிதாபத்துக்குரியவன்.
[ ]
A woman may veil her face with a smile.
பெண் , புன்னகை என்னும் முகமூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
[ ]
Trees are poems that the earth writes upon the sky. We fell them down and turn them into paper that we may record our emptiness.
பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள் , ஆனால் அவற்றை நாம் வெட்டிச் சாய்த்து காகிதமாக்கி , நம் வெறுமையை அதில் எழுதித் தீர்க்கிறோம்.
[ ]
Poetry is not an opinion expressed. It is a song that rises from a bleeding wound or a smiling mouth.
கவிதை என்பது கருத்தல்ல , அது குருதி வழியும் காயத்திலிருந்தோ புன்னகை புரியும் உதடுகளிலிருந்தோ உதயமாகிறது .
[ ]
A thousand years ago my neighbor said to me, "I hate life, for it is naught but a thing of pain." And yesterday I passed by a cemetery and saw life dancing upon his grave.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என் அண்டைவீட்டுக்காரன் என்னிடம் சொன்னான் .. " நான் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்....இது வலி மிகுந்தது " நேற்று மயானம் வழியே சென்ற பொழுது கவனித்தேன்.. அந்த அண்டைவீட்டுக்காரனின் சமாதி மீது வாழ்க்கை நடனமாடிக்கொண்டிருந்தது.

[ ]
If your heart is a volcano how shall you expect flowers to bloom in your hands? உன் உள்ளம் எரிமலையாகப் பொங்கினால் உன் உள்ளங்கையில் எப்படி மலர்கள் பூக்கும் ?
[ ]
Many a woman borrows a man's heart; very few could possess it.
அநேக பெண்கள் ஆணின் இதயத்தை இரவலாகப் பெறுகிறார்கள் ஆனால் ஒரு சிலரே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
[ ]
Lovers embrace that which is between them rather than each other.
காதலர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் பொழுது தங்களுக்கு இடைப்பட்ட காதலைத் தான் தழுவிக்கொள்கிறார்கள்.. தங்களை அல்ல.....
[ ]
Even the hands that make crowns of thorns are better than idle hands.
சோம்பியிருக்கும் கரங்களை விட முட்கிரீடங்கள் செய்யும் கரங்கள் எவ்வளவோ மேல்.
[ ]
அவளுடைய
அழகிய மென்மையான
கைவிரல்களால் கோதப்படும்
என் தலைமுடிக்கு,
சூட்டப்படும் வேறெந்த மகுடத்தையும்
நான் ஏற்கத் தயாராயில்லை.
[ ]
வெள்ளைக் காகிதம்
ஒன்று பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய்
இருந்தது.

அது சொன்னது,
"நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்களும் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை..!

இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியபடி
பரிசுத்தமானதாகவே இருக்கிறது..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது..!!

பழமொழி

பழமொழி, நம் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. திரைப்படங்கள், சிலரது உரையாடல் இவைகளில் பழமொழிகளை கேட்டிருக்கிறோம். கிராமப்புற மக்களின் அன்றாட சம்பாஷணைகளில் பழமொழியும் கலந்து வரும்.

பழமொழியை பிழைமொழி என்று சொல்லிப் புறங்கையால் ஒதுக்கிவிடமுடியாது.தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது , முதுசொல், முதுமொழி,பழஞ்சொல்,மூதுரைஎன்று பலவாறாக குறிக்கப்படுகிறது. தொல்காப்பியத்தில் பழமொழிக்கான விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில்ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பழமொழியானது Proverb என்றும் old sayings என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான தமிழ்ப் பழமொழிகள் எதுகை மோனையிலும் , முரண்தொடையிலும் எழுதப்பட்டுள்ளன.

சில பழமொழிகள்.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது.
- அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது.
- அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்.
- அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.
- அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்.
- அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்.
- அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்.
- அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்.
- அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்.
- அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை.
- அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு.
- ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போதுஇலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்.
- ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு
- ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
- ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்.
- ஆடத்தெரியாத தேவடியாளுக்கு கூடம் போறாதாம்
- ஆற்றுல போட்டாலும் அளந்து போடு
- ஆழமறியாமல் காலை விடாதே.
- ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் (மருவி ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றது) .
- ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்.
- ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு.
- ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.
- ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்.
- படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
- பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்.
- சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி.
- எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாதுஅவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்.
- உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது.
- சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்புஅயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு.
- உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்.
- எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
- நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்ஜன்னல்கள் வழிகாட்டும்.
- ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்.
- காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்.
- ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை.
- ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்.
- ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்.
- குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
- ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்.
- தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை.
- மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் .
- நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னைமூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்.
- மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
- ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்.
- ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை.
- மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்.
- கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்பற்றிய நினைப்பை உண்டாக்குவார்.
- பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்.
- காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்.
- கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா.
- உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்உடையார் பாளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?
- உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்.
- தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்.
- ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் .
- துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்.
- இடுக்கண் வருங்கால் நகுக.
- இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்.
- சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்.
- தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது.
- கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

Tuesday

19-B


கண்களை திறக்க மனமில்லாமல், திறந்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை. மெதுவாக கண்களை திறந்தேன்.பார்வை நேராக கடிகாரத்தை நோக்கியது. கடிகாரம் மணி 8 என்றது.

அய்யோ... மணி எட்டா...

ச்சே.. என்னடா பொழப்பு இது.. நிம்மதியா தூங்ககூட முடியல..

பரபரப்பாக நிமிடங்கள் கரையதொடங்கின.. office கிளம்பி பேருந்து நிலையத்தை நோக்கி 15-20௦ நிமிட நடை. தி-நகர் பேருந்து நிலையம். பேருந்திற்காக காத்திருக்கும் அனைத்து பயணிகளின் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும். நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே எல்லா வண்டியும் காலியா போகும். நாம கெளம்பும் போதுதான் ஊர்ல உள்ள அத்தன பேறும் கெளம்புவான் . பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! சரி.. நம்ம விஷயத்துக்கு வருவோம்.

9 - 9.15 மணி 19 B மணி பஸ் பிடிக்க ஒரு கூட்டமே நிக்கும். அந்த கூட்டதோட கூட்டமா நானும் ஒரு ஆளா பஸ்சுக்கு நின்னுட்டு இருந்தேன். பஸ்சும் வந்துச்சி. பஸ்சுல சீட் புடிக்கிற வேல இருக்கே அப்பாப்பா...பை..குடை..கர்ச்சீப் .. துண்டு. இப்படியெல்லாம் இந்த பஸுல கர்ச்சீப் .. துண்டு.. போடுற விஷயம் கெடயாது. சீட்டு இருந்தா ஒக்காந்துகலாம். இல்லன நின்னுட்டு வரவேண்டித்தான். சீட் கெடச்சா அதிஷ்டம் .( அதிஷ்டம் அப்படின என்ன. அது இஷ்டம். அது இஷ்ட பட்டா வரும் இல்லன இல்ல..). அன்னைக்கி எனக்கு அதிஷ்டம் இல்ல. சரின்னு ஒரு இடத்துல வசதியா நின்னுகிட்டேன். எனக்கு எதிர்ல ஒரு பொண்ணு. ( என்னடா track மாறுதுன்னு நினைக்க வேணாம். )

தி-நகர்ல கெளம்பி , சைதாபேட்டை தாண்டி பஸ் போய்ட்டு இருந்துச்சு. பஸ்ல இருந்து வெளில வேடிக்கை பாக்க எனக்கு புடிக்கும் . அப்படி பாத்துகிட்டே வரும்போது. தற்செயலா அந்த பொண்ண பாத்தேன். நின்னுகிட்டே தூங்க முயற்சி பண்ணிட்டு இருந்துச்சு. கண்ணு கொஞ்சமா இழுத்துட்டு போச்சு. தல கொஞ்சமா முன்னால போய்... போய்ய்ய்ய்ய்... அப்பாட.. டக்குனு முழிப்பு.. சுத்தும் முத்தும் பாத்த பிறகு கொஞ்சம் நேரம் வெளில வேடிக்க.. அப்புறம் கொஞ்சமா கண்ணு இழுத்துட்டு போகும்.. அந்த பொண்ணு நின்னுக்கிட்டு தூங்க பட்ட பாடு.. கொஞ்சம் இடம் கெடச்சா பாய் போட்டு நிம்மதியா தூங்கும் போல.

மறுநாள்... எப்படியோ உக்கார seat கெடச்சது. அப்பாடான்னு ஒக்காந்துகிடேன். அந்த பொண்ணுக்கு அதிஷ்டம் இருந்தது போல ஒக்கார seat கெடச்சி சந்தோசமா. அந்த பஸ்ல ஒக்கார seat கெடச்ச எல்லாரு முகத்தையும் பாத்தா தெரியும் அந்த சந்தோசம். அந்த பொண்ணுக்கு seat கெடச்சதுக்கு அந்த பொண்ணு சந்தோஷ படுதோ இல்லையோ எனக்கு அப்பாட இன்னைக்கு நிம்மதியா தூங்கிட்டு வருண்டா இந்த பொண்ணு அப்படினு தோனுச்சு.
சரி இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாக்கலான்னு இருந்தேன்.

வழக்கம்போல சைதாபேட்டை தாண்டி பஸ் போய்ட்டு இருந்துச்சு பொண்ணு வசதியா தூங்கிட்டு வந்துச்சி. பின்னாடி சாயமுடியாது அதனால என்ன அதான் முன்னாடி எடம் இருக்கே. left, right, frontனு சும்மா சொழண்டு சொழண்டு... பொண்ணுக்கு நிம்மதியான தூக்கம்.( தூங்கற styleஅ வீடியோ எடுத்து காமிச்சா அந்த பொண்ணு தூங்கறத விட்டுடும்போல. )
நான் தூங்கரத பாத்து நீ நக்கல் பண்றியா.. இருடா ஒனக்கு இருக்கு.( வேற எதுவும் யோசனைக்கு போக வேணாம் சொல்றேன் ) .
இன்னொரு நாள் ரெண்டு பேருக்குமே seat கெடைக்கல. தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பொண்ணு பின்னாடி நின்னுட்டேன். வழக்கம்போல நின்னுகிட்டே தூக்கம். நானும் பாத்துகிட்டே வந்தேன் பொண்ணு கப்பில முட்டிகுமா முட்டதானு.. சரியா Tidel Park ரோடு . டிரைவர் போட்ட sudden Break பஸ்ல இருந்த எல்லோருக்கும் balance போச்சு. எனக்கு முன்னால இருந்த அந்த பொண்ணு கம்பிய புடிச்சிக்கிட்டு seat மேல விழுந்தா. எனக்கும் balance இல்ல கம்பிய புடிச்சிக்கிட்டு இருந்த அந்த பொண்ணு முழஞ்கை என்னோட வயித்துல நல்லா அழுந்திடிச்சு. எனக்கு வலினா அப்படி ஒரு வலி. ஒரு 5 நிமிடம் அப்புறம் சரிஆயிடுச்சி. இதுக்குதான் அந்த பொண்ணு " நான் தூகரத பாத்து நீ நக்கல் பண்றியா.. இருடா ஒனக்கு இருக்குனு நெனைச்சிருக்குமோ.
ஒரு நாள் அப்படித்தான்.. எனக்கு பின் seatஅ ஒக்காந்திருகனும் போல. நானும் அந்த பொண்ண பாக்கல. நான் இறங்க வேண்டிய இடத்துல எறங்கினேன் பின்னாடியே அந்த பொண்ணு இறங்கிச்சு. சரி பாப்பா தூங்கிட்டு இறங்க மறந்திருச்சி போல அப்படினு நினைச்சேன். சேச்சே அபடியல்லாம் இருகாது. அப்படியெல்லாம் இருக்காதுன வேற எப்படி .. சரி கேக்கலாம் அப்படினு கேட்டேன் அந்த பொண்ணு ஆமா அப்படின்னு சொல்றபோல சிரிப்பு மட்டும் வந்துச்சு.


அடுத்த நாள், வழக்கம் போல இடம்புடிச்சு எல்லாரும் ஒக்காந்தாச்சு. இன்னைக்கு பொண்ணு தூங்கவே இல்ல. ஆனா பொண்ணுக்கு தூக்கம் கண்ண இழுத்துட்டு போச்சு. என்னக்கா.. சிரிப்ப அடக்க முடியல..சைதாபேட்டை Hyundai show Room சிக்னல், கோர்ட், மத்திய கைலாஷ் ( WPT) Tidel Park (NIFT) கிட்ட. அப்புறம் ASV Tech Park இங்கல்லேம் கண்ணு அப்படியே இழுத்துட்டு போகும் ஆனா எப்படியோ தூங்காம சமாளிச்சு கரெக்டா இறங்க வேண்டிய இடத்துல இறங்கிடிச்சு பொண்ணு . எனக்கு சிரிப்பு வந்தாலும் ஒரு பக்கம் கழ்டம இருந்துச்சு பொண்ணு நிம்மதியா தூங்க முடியலயே.

Thursday

தண்டனைகள்

கழுமரம் பற்றிய சில கதைகள் கேட்டிருக்கிறோம். கழுகுகள் வட்டமிடும் ஒரு மலையோரத்தில் ஒரு மரத்தை நட்டு அந்த மரத்தில் குற்றவாளியை கட்டி தொங்கவிடுவார்கள். அவன் உடம்பில் ஆங்காங்கே இரத்தம் கசியும்படி கீறிவிடுவார்கள். இந்த இரத்த வாடையை உணர்ந்த கழுகு கூட்டம் வந்து அவன் உடலை குத்தி குத்தி உடலை கிழிக்கும். இப்படியுமாக சில கதைகளில் கழுமரம் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி கழுமரம் போன்று ஏனைய கருவிகள் உண்டு. பள்ளிகளில் வரலாற்று பாடத்தில் படித்திருப்போம், கில்லடின் என்ற கருவியை பற்றி. ஒரு கத்தி போன்ற இரும்பு தகடு நேராக நிறுத்திவைக்கப்பட்டு குற்றவாளியின் கழுத்து அந்த தகட்டின் மேல் வைக்கப்படும். மேலிருந்து ஒரு தகடு குற்றவாளியின் கழுத்தை துண்டாக்கும். இதுபோன்ற பல முறைகள் கையாளப்படுகின்றன. மின்சார நாற்காலி, விஷ ஊசி,பழந்தமிழகத்தில் யானையின் காலால் தலையை இடறிக் கொல்லுதல், வாளால் வெட்டிக் கொல்லுதல், சுண்ணாம்பு காளவாயில் போடுதல் முதலிய மரண தண்டனைகள் இருந்தன.
விநோத தண்டனைகள் உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். எத்தனையோ முறைகள் இந்த வார்த்தைகளை கேட்டிருந்த போதிலும், தண்டனைகள் எந்த முறைகளில், எப்படி கொடுக்கப்படுகின்றன சவுக்கடி, மொட்டை அடித்தல் , கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் விடுதல் இப்படிபட்ட தண்டனைகள் கேட்டிருக்கிறோம். சில தண்டனை முறைகளை கேட்கும் போதே மரண ஓலம் நம் காதுகளில் கேட்கும் அளவிற்கு, தண்டனையின் வலியை உணரமுடியும்.
கழுமரம் : கழுமரம் என்பது ஒரு கருவி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இக்கொலை கருவி உபயோகப்படுத்தபட்டிருந்தது. இந்த கழுமரத்தை நேரில் பார்த்த ராமகிருஷ்ணன் அவரது பதிப்பில் இப்படி கூறுகிறார். இந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கப்பட்டிருந்தன. இப்படித்தான் இந்த கழுமரம் இருக்கும். கூர்மையாக செதுக்கப்பட்ட இந்த கழுமரத்தில் குற்றவாளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள். மரம் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் உள்ளேறி இறந்து போவான்.


இரும்பு காளை: venus in furs என்ற நாவலில் இந்த குறிப்பு இடம் பெற்றுள்ளது. இரும்பு காளை இந்த தண்டனை கருவியின் பெயர் இதுதான். குற்றவாளியை இந்த கருவியின்/எந்திரத்தின் உள்ளே வைத்து அந்த காளைக்கு நெருப்பு வைத்து விட்டால் அந்த காளையின் உள்ளிருந்து வரும் அலறல் ஒரு காளை கத்துவது போல இருக்கும். இக்கருவியை கண்டுபிடித்தவன் டையனசிஸ் என்ற மகாராஜாவிடம் கொண்டு வந்து விலாவரியாக விளக்கி விவரம் சொன்னான் . அதை உறுதிபடுத்திக்கொள்ள கண்டுபிடித்தவனையே இரும்பு காளைக்குள் வைத்து சோதனை செய்து பார்த்தான்.

Wednesday

டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைத் துளிகள்..

1.ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.

2.ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.

3.சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.

4.வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும்.

5.இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ளவர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக கருதப்பட்டது. இதை மீறி கல்வி கற்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது

6.கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை'! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். மேல் சாதியில் இருக்கும் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருவர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில்,படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.

7.தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.

8.இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும், புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை. புத்தருடைய காலத்தில்,1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.

9.உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.